07 June 2016

BK Murli 8 June 2016 Tamil

BK Murli 8 June 2016 Tamil

08.06.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! தூய்மை ஆவதற்கான ஒரே ஒரு உபாயம் (பரிகாரம்) - தந்தையின் நினைவு, நினைவின் முயற்சி தான் கடைசியில் பயன்படும்.கேள்வி :

சங்கமயுகத்தில் எந்த ஒரு திலகத்தை அணிவிப்பதால் சொர்க்கத்தின் இராஜதிலகம் கிடைத்து விடும்?பதில் :

சங்கமயுகத்தில் இதே திலகத்தை அணிவியுங்கள் (சூடிக் கொள்ளுங்கள்) - நான் ஆத்மா ஒரு புள்ளியாக இருக்கிறேன். நான் சரீரமல்ல. உள்ளுக்குள் இதையே மனனம் செய்து கொண்டிருங்கள், அதாவது நான் ஆத்மா, நான் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும். பாபாவும் புள்ளியாக உள்ளார், நானும் புள்ளியாக உள்ளேன். இந்தத் திலகத்தின் மூலம் சொர்க்கத்தின் இராஜதிலகம் கிடைத்து விடும். பாபா சொல்கிறார், நான் கேரண்டி தருகிறேன் - நீங்கள் நினைவு செய்வீர்களானால் அரைக்கல்பத்திற்கு அழுவதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.ஓம் சாந்தி.

நான் ஆத்மா தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும், அப்போது தான் பாவனமாக முடியும். இந்த அக்கறை இருக்க வேண்டும். முயற்சி என்றாலே இது தான். அந்த முயற்சியில் குழந்தைகள் ஈடுபடுவதில்லை. மாயா அதிகமாகத் தொந்தரவு செய்கிறது. ஒரு தந்தையின் நினைவை மறக்கும்படி செய்து விடுகின்றது. மற்றவர்களின் நினைவு வந்து விடுகின்றது. தந்தை அல்லது நாயகனை நினைவு செய்வதில்லை. இப்படிப்பட்ட நாயகனை குறைந்தது 8 மணி நேரமாவது நினைவு செய்வதற்கான சேவையைத் தர வேண்டும். அதாவது நாயகனை, நினைவு செய்வதற்கான உதவியைச் செய்ய வேண்டும். அல்லது குழந்தைகள் தந்தையை நினைவு செய்ய வேண்டும்-இது தான் மிகப்பெரிய முயற்சியாகும். கீதையிலும் கூட மன்மனாபவ என்பது உள்ளது. தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். அமரும் போது, எழுந்திருக்கும் போது, நடமாடும் போது, சுற்றி வரும் போது ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்து கொண்டே இருங்கள். வேறொன்றும் இல்லை. கடைசியில் இந்த நினைவு தான் பயன் தரும். தன்னை ஆத்மா, அசரீரி என உணருங்கள். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த முயற்சியை அதிகம் செய்ய வேண்டும். காலையில் குளியல் முதலியன செய்து விட்டுப் பிறகு தனிமையில் மேலே மொட்டை மாடியில் அல்லது ஹாலில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள். எவ்வளவு தனிமை உள்ளதோ, அவ்வளவு நல்லது. எப்போதும் இதே சிந்தனை செய்யுங்கள்-நாம் பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபாவிடம் இருந்து முழு ஆஸ்தி பெற வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீங்கள் செய்ய வேண்டி உள்ளது. சத்யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் - எங்குமே நீங்கள் இந்த முயற்சி செய்ய வேண்டியது இருக்காது. இந்த சங்கமயுகத்தில் தான் உங்களுக்கு பாபா சொல்கிறார்-என்னை நினைவு செய்யுங்கள், போதும். இதுதான் உகந்த சமயம் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். தந்தை வருவதும் சங்கமயுகத்தில் தான். வேறு எப்போதுமே தந்தை வருவதில்லை. நீங்களும் கூட நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அறிந்திருக்கிறீர்கள். அநேகக் குழந்தைகள் தந்தையை மறந்து விடுகின்றனர். அதனால் அதிக ஏமாற்றம் அடைகின்றனர். இராவணன் அதிகமாக ஏமாற்றக் கூடியவன். அரைக்கல்பத்தின் விரோதி இராவணன். அதனால் பாபா சொல்கிறார்-தினந்தோறும் காலையில் எழுந்து இந்த விசார் சாகர் மந்தன் செய்யுங்கள் மற்றும் இதற்கான சார்ட் வையுங்கள் - எவ்வளவு நேரம் நாம் பாபாவை நினைவு செய்தோம்? எவ்வளவு கறை நீங்கியிருக்கும்? எல்லாமே நினைவின் ஆதாரத்தில் தான் உள்ளது. குழந்தைகள் தங்களின் முழு ஆஸ்தியையும் பெறுவதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். நரனில் இருந்து நாராயணன் ஆக வேண்டும். இது உண்மையான சத்திய நாராயணனின் கதையாகும். பக்தர்கள் பௌர்ணமி அன்று சத்திய நாராயணனின் கதையை (காலாட் சேபம்) நடத்துகின்றனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், 16 கலை சம்பூர்ணமாக ஆக வேண்டும். சத்தியமான தந்தையை நினைவு செய்வதன் மூலம் தான் அது போல் ஆக முடியும். பாபா ஸ்ரீமத் தருபவர். பாபா சொல்கிறார், இல்லறத்தில் இருங்கள், வேலை-தொழில்கள் என்று எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். பாபாவை அவசியம் நினைவு செய்ய வேண்டும். தூய்மை ஆக வேண்டும். அவ்வளவு தான். நினைவு செய்யவில்லை என்றால் இராவணனிடம் எங்காவது ஏமாற்றமடைந்து கொண்டே இருப்பார்கள். அதனால் நினைவின் முக்கிய விஷயத்தைப் புரிய வைக்கிறார். சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். தேகத்துடன் கூடவே தேகத்தின் உறவுகள் அனைத்தையும் மறந்து தன்னை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள். பாபா அடிக்கடி புரிய வைக்கிறார்-தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இல்லையென்றால் கடைசியில் மிக-மிக வருத்தப் படுவீர்கள். அதிகமாக ஏமாற்றமடைவீர்கள். ஏதேனும் அப்படி வேகமாக அடி விழும்-மாயா ஒரேயடியாக முகத்தைக் கருப்பாக்கி விடும். பாபா வந்துள்ளார், முகத்தை வெள்ளையாக (தூய்மையாக) ஆக்குவதற்காக. இச்சமயம் அனைவரும் ஒருவரை ஒருவர் முகத்தை முற்றிலும் கருப்பாக ஆக்கிக் கொண்டுள்ளனர். வெள்ளையாக ஆக்குபவர் ஒரே ஒரு பாபா தான். அவருடைய நினைவினால் நீங்கள் தூய்மையான சொர்க்கத்தின் எஜமானராக ஆவீர்கள். இது தூய்மையற்ற உலகம் தான். தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குவதற்காகவே தந்தை வருகிறார். மற்றப்படி உங்களுடைய வேலை-தொழில்கள் முதலியவற்றுடன் அவருக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சரீர நிர்வாகத்திற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, செய்யுங்கள். பாபாவோ மன்மனாபவ என்பதை மட்டுமே சொல்கிறார். நாங்கள் எப்படி தூய்மையான உலகின் எஜமானர் ஆவது என்று நீங்கள் கேட்கவும் செய்கிறீர்கள். பாபா, என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே சொல்கிறார். அவ்வளவு தான். தூய்மை ஆவதற்கான வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது. எவ்வளவு தான் தான-புண்ணியம் முதலியன செய்தாலும், எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சரி, நெருப்புக்குள் வருவதும் போவதுமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பயனும் கிடையாது - ஒரு தந்தையின் நினைவைத் தவிர. மிகவும் எளிய விஷயம் தான், இது சகஜ யோகம் என்றே சொல்லப் படுகின்றது. தன்னைத் தான் கேளுங்கள்-நாம் நம்முடைய இனிமையிலும் இனிமையான தந்தையை ஒரு நாளில் எவ்வளவு நினைவு செய்கிறோம்? தூக்கத்திலோ எந்த ஒரு பாவமும் நடப்பதில்லை. அசரீரி ஆகி விடுகின்றனர். மற்றப்படி பகலில் அநேகப் பாவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மேலும் பழைய பாவங்களும் நிறைய உள்ளன. நினைவின் முயற்சியைச் செய்ய வேண்டும். இங்கே வருகிறீர்கள் என்றால் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். வெளியுலகின் வீண் சிந்தனைகளை அப்புறப் படுத்தி விடுங்கள். இல்லையென்றால் வாயுமண்டலத்தை மிகவும் கெடுத்து விடுகின்றனர். வீட்டைப் பற்றிய விவசாயம்-தொழில் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சில நேரம் குழந்தைகளின் நினைவு வரும். சில நேரம் குருவின் நினைவு வரும். எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்குமானால் வாயுமண்டலத்தைக் கெடுத்து விடுவார்கள். முயற்சி செய்யாதவர்கள் விக்னங்களை ஏற்படுத்து வார்கள். இவை அவ்வளவு நுட்பமான விஷயங்களாகும். நீங்களும் இப்போது அறிவீர்கள் - பிறகு ஒரு போதும் அறிந்து கொள்ள மாட்டீர்கள். பாபா இப்போது தான் ஆஸ்தியைத் தருகிறார். பிறகு அரைக்கல்பத்திற்குக் கவலையற்று இருப்பார். லௌகிகத் தந்தையின் சிந்தனை மற்றும் எல்லையற்ற தந்தையின் சிந்தனைக்கிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! பாபா சொல்கிறார், பக்தி மார்க்கத்தில் எனக்கு எவ்வளவு சிந்தனைகள் உள்ளன! பக்தர்கள் எவ்வளவு அடிக்கடி நினைவு செய்கின்றனர்! சத்யுகத்தில் யாருமே நினைவு செய்வதில்லை. பாபா சொல்கிறார், உங்களுக்கு அவ்வளவு சுகம் தருகிறேன், அதனால் உங்களுக்கு அங்கே (சத்யுகத்தில்) என்னை நினைவு செய்வதற்கான தேவையே இருக்காது. எனக்குத் தெரியும், நம்முடைய குழந்தைகள் சுகதாம், சாந்தி தாமத்தில் அமர்ந்துள்ளனர். வேறு எந்த ஒரு மனிதரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட தந்தை மீது நிச்சயபுத்தி உள்ளவராக ஆவதில் மாயா விக்னத்தை ஏற்படுத்துகிறது. பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் மீது படிந்துள்ள வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய அலாய்கள் (கறைகள்) நீங்கி விடும். கோல்டன் ஏஜிலிருந்து (சத்யுகத்திலிருந்து ) சில்வர் ஏஜில் (திரேதா) வரும் போதும் கூட இரண்டு கலைகள் குறைந்து விடுகின்றன. இந்த விஷயங்களை நீங்கள் கேட்கவும் புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள். உண்மையான பிராமணர் என்றால் அவருடைய புத்தியில் நல்லபடியாகப் பதியும். இல்லையென்றால் பதியாது. நினைவு நிலைக்காது. அனைத்துமே பாபாவை நினைவு செய்வதின் ஆதாரத்தில் தான் உள்ளது. பாபா அடிக்கடி சொல்கிறார், தந்தையை நினைவு செய்யுங்கள் என்று. ஹே குழந்தைகளே! என்று ஆத்மாக்களுக்குச் சொல்கிறார். அந்த நிராகார் பரமாத்மாவும் கூட ஆத்மாக்களுக்குச் சொல்வார். முக்கியமான விஷயமே இது தான். யாராவது வந்தால் அவர்களுக்கு முதல்-முதலில் சொல்லுங்கள்-அல்ஃபை (அப்பாவை) நினைவு செய்யுங்கள் என்று. மற்றப்படி வெறும் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இதை மட்டும் சொல்லுங்கள் - தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். இதைத் தான் உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஆத்மா, பாடுகின்றனர் இல்லையா - துளசிதாசர் சந்தனம் பூசினார், ரகுவீர் திலகம் அணிந்தார்..... திலகம் என்பது ஸ்தூலமானதல்ல. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், திலகம் உண்மையில் இச்சமயத்தின் நினைவுச் சின்னம். நீங்கள் நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்றால் இராஜ்யத்தின் திலகத்தை அணிந்து கொள்கிறீர்கள். இராஜ்யத்தின் திலகம் கிடைக்கும் என்றால் சொர்க்கத்தின் மகாராஜா, மகாராணி ஆவீர்கள் என்று பொருள். பாபா எவ்வளவு சுலபமாகப் புரியும்படி சொல்கிறார்! இதை மட்டும் நினைவு செய்யுங்கள் - நாம் ஆத்மா, சரீரமல்ல. நாம் பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற வேண்டும்.நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மா ஒரு புள்ளியைப் போல் இருக்கிறோம். பாபாவும் ஒரு புள்ளியாக உள்ளார். பாபா ஞானக்கடலாக, சுகத்தின் கடலாக இருக்கிறார். அவர் நமக்கு வரதானம் தருகிறார். இவருக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார். குரு தம்முடைய சீடனைப் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கற்றுத் தருகிறார். இவரும் பக்கத்தில் அமர்கிறார். குழந்தைகளுக்கு இதை மட்டும் சொல்கிறார்-தன்னை ஆத்மா என உணருங்கள், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். சத்யுகத்திலும் நீங்கள் உங்களை ஆத்மா என உணர்ந்திருக்கிறீர்கள். ஆனால் தந்தையை அறிய மாட்டீர்கள். நாம் ஆத்மா சரீரத்தை விடுகிறோம், பிறகு வேறொன்றை எடுக்கிறோம். டிராமாவின் அனுசாரம் உங்களுடைய பார்ட்டே இது போலத் தான் உள்ளது. அதனால் உங்களுடைய ஆயுள் அங்கே நீண்டதாக இருக்கும். தூய்மையாக இருப்பீர்கள். சத்யுகத்தில் நீண்ட ஆயுள் இருக்கும். கலியுகத்தில் குறைவாக ஆகி விடும். அங்கே இருப்பவர்கள் யோகிகள். இங்கே இருப்பவர்கள் போகிகள். யோகிகள் தூய்மையாக இருப்பார்கள். அங்கே இராவண இராஜ்யமே இருக்காது. ஆயுள் நீண்டதாக இருக்கும். இங்கே ஆயுள் எவ்வளவு குறைவாக உள்ளது! இது கர்மபோகம் எனச் சொல்லப் படுகின்றது. அங்கே அகால மரணம் ஒரு போதும் நடக்காது. ஆக, பாபா சொல்கிறார், தந்தையை அறிந்து கொண்டீர்கள் என்றால் ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். தன்னை ஆத்மா என உணருங்கள். நாம் இப்போது (வீட்டுக்கு) செல்ல வேண்டும். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டும். இன்னும் மீதமுள்ள நேரத்தை சேவையில் பயன்படுத்த வேண்டும்.குழந்தைகள் நீங்கள் மிகவும் ஏழைகள். அதனால் பாபாவுக்கு இரக்கம் வருகின்றது. வயதான மாதாக்கள், கூனிகள் முதலிய உங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் தருவதில்லை. வயதான மாதாக்கள் கூனிகள் என அழைக்கப் படுகின்றனர். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று வயதான மாதாக்களுக்குப் புரிய வைக்கப் படுகின்றது. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்கலாம். கீதாபாடசாலைக்குச் செல்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். இங்கே (சங்கமத்தில்) அந்தக் கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்து இப்போது பாபாவிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.குழந்தைகள் கண்காட்சிகள் முதலியவற்றில் எவ்வளவு செலவு செய்கின்றனர்! எழுதவும் செய்கின்றனர், இன்னார் நன்றாகக் (ஞானத்தால்) கவரப் பட்டார்கள். ஆனால் பாபா சொல்கிறார், ஒருவர் கூட இது போல் எழுதுவதில்லை - நிச்சயமாக எல்லையற்ற தந்தை இந்தச் சமயம் இந்த பிரம்மா உடலில் வந்துள்ளார், அவர் மூலம் தான் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க முடியும் என்று. இதனால் பாபா புரிந்து கொள்கிறார், ஒருவருக்குக் கூட நிச்சயம் ஏற்படவில்லை. இந்த ஞானம் மிக நன்றாக உள்ளது என்று வெறுமனே கவரப் படுகின்றனர். ஏணிப்படி சரியாகக் காண்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் தான் யோகத்தில் இருந்து தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும்-இதைச் செய்வதில்லை. வெறுமனே சொல்கின்றனர், பரமாத்மாவிடம் ஆஸ்தி பெறுவதற்கான ஞானத்தைப் புரிய வைப்பது மிக நன்றாக உள்ளது. ஆனால் தாங்கள் அதை அடைய வேண்டும்-இது நடைபெறுவதில்லை. கொஞ்சம் கூடப் புருஷார்த்தம் செய்வதில்லை. பிரஜைகள் ஏராளமாகத் தயாராவார்கள். மற்றப்படி இராஜாக்கள் உருவாக வேண்டும் - அந்த முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தனது மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும்-நாம் எது வரை பாபாவின் நினைவில் மகிழ்ந்திருக்கிறோம்? நாம் தான் மீண்டும் தேவதை ஆகிறோம். இப்படி-இப்படி தனக்குத் தான் தனிமையில் அமர்ந்து பேசிக் கொள்ள வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களானால் பாபா உத்திரவாதம் தருகிறார்- நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஒரு போதும் அழ மாட்டீôகள். இப்போது நீங்கள் சொல்கிறீர்கள் - பாபா வந்து இராவணனாகிய மாயாவை வெற்றி கொள்ளச் செய்கிறார். யார் எவ்வளவு முயற்சி செய்கிறாரோ, தனக்காகவே செய்கிறார். பிறகு நீங்கள் புது உலகத்திற்கு வருவீர்கள். பழைய உலகத்தின் கணக்கு-வழக்கையும் முடிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும். தூய்மையாவதற்கான யுக்தியும் சொல்கிறார். இது கயாமத் (விசாரணை மற்றும் தீர்ப்பிற்கான) சமயம். அனைத்தும் விநாசமாக வேண்டும். புது உலகத்தின் ஸ்தாபனை நடைபெற வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நாம் இந்த மரண உலகத்தில் இந்த சரீரத்தை விட்டுப் பிறகு புது உலகமாகிய அமரலோகத்தில் வருவோம். நாம் படிப்பதே புது உலகத்திற்காகத் தான். இது போன்ற வருங்காலத்திற்கான படிப்பைச் சொல்லித் தரக்கூடிய பாடசாலை வேறு எதுவும் கிடையாது. ஆம், யார் அதிக தான-புண்ணியம் செய்கின்றனரோ, அவர்கள் இராஜாவிடம் பிறவி எடுப்பார்கள். கோல்டன் ஸ்பூன் இன் மவுத் (பிறக்கும் போதே செல்வந்தராகப் பிறப்பது) என்று சொல்லப் படுகின்றது. சத்யுகத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது, கலியுகத்திலும் யார் இராஜாக்களிடம் பிறவி எடுக்கின்றனரோ, அவர்களுக்கும் கிடைக்கின்றது. பிறகும் இங்கே அநேக விதமான துக்கங்கள் உள்ளன. உங்களுக்கோ வரும் 21 பிறவிகளுக்கு துக்கம் இருக்காது. ஒரு போதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள். சொர்க்கத்தில் தங்க ஸ்பூன். இங்கே அல்ப காலத்திற்கான இராஜ்யம். உங்களுடையது 21 பிறவிகளுக்கானது. புத்தி மூலம் நல்லபடியாகக் காரியமாற்ற வேண்டும். பிறகு புரிய வைக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் இராஜா ஆக முடியாது என்பதல்ல. யாராவது கல்லூரி, மருத்துவமனை கட்டுகின்றனர் என்றால் அவர்களுக்கும் அதற்கான பலன் கிடைக்கிறது. மருத்துவமனை கட்டுகின்றனர் என்றால் அடுத்த பிறவியில் நல்ல ஆரோக்கியம் இருக்கும். சொல்கின்றனர் இல்லையா - இவருக்கு ஆயுள் முழுவதும் காய்ச்சலே வந்ததில்லை என்று? நீண்ட ஆயுள் இருக்கும். அதிகமாக தானம் முதலியன செய்துள்ளனர், மருத்துவமனை முதலியவற்றைக் கட்டுகின்றனர் என்றால் அப்போது ஆயுள் அதிகமாகும். இங்கோ யோகத்தினால் நீங்கள் சதா ஆரோக்கியம், செல்வம் நிறைந்தவர்களாக ஆகிறீர்கள். யோகத்தால் நீங்கள் 21 பிறவிகளுக்கு உடல் நலம் பெறுகிறீர்கள். இதுவோ மிகப்பெரிய மருத்துவ மனையாக, மிகப்பெரிய கல்லூரியாக உள்ளது. பாபா ஒவ்வொரு விஷயத்தையும் நல்லபடியாப் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார், யாருக்கு எங்கே மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, எங்கே மனம் ஈடுபடுகிறதோ, அங்கே சென்று படிப்பைப் படிக்க முடியும். எங்களது சென்டருக்கு வர வேண்டும், இவர்களிடம் ஏன் செல்கின்றனர் என்றெல்லாம் சொல்லக் கூடாது. யாருக்கு எங்கே வேண்டுமோ, அங்கே செல்லலாம். விஷயமோ ஒன்று தான். முரளியோ படித்துச் சொல்கின்றனர். அந்த முரளி இங்கிருந்து செல்கிறது. பிறகு சிலர் விஸ்தாரமாக நன்கு புரிய வைக்கின்றனர். சிலர் வெறுமனே படித்துச் சொல்கின்றனர். சொற்பொழிவு செய்பவர்கள் நன்கு அறைகூவல் (சவால்) விடுப்பார்கள். எங்கே சொற்பொழிவு இருந்தாலும் முதல்-முதலில் சொல்லுங்கள் - சிவபாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகி விடும், மேலும் தூய்மையாகி, தூய்மையான உலகின் எஜமானர் ஆவீர்கள். எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கிறார்! நல்லது.இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!தாரணைக்கான முக்கிய சாரம் :

1) வெளியுலகின் வீண் சிந்தனைகளை விட்டு, தனிமையில் அமர்ந்து நினைவின் முயற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டும். மேலும் தனது சார்ட்டை வைக்க வேண்டும்.2) எப்படி பக்தியில் தான-புண்ணியத்திற்கு மகத்துவம் உள்ளதோ, அது போல் ஞான மார்க்கத்தில் நினைவுக்கு மகத்துவம் உள்ளது. நினைவினால் ஆத்மாவை சதா ஆரோக்கியமாக, செல்வந்தராக ஆக்க வேண்டும். அசரீரியாக இருப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும்.வரதானம் :

தனது ஸ்மிருதியின் ஜோதி (கடந்த கால நினைவின்) மூலம் குலத்தின் பெயரை விளங்கச் செய்கின்ற குலதீபம் ஆகுக.இந்த பிராமண குலம் அனைத்தையும் விடப் பெரியதிலும் பெரிய குலமாகும். நீங்கள் அனைவரும் இந்தக் குலத்தின் தீபங்கள். குல தீபம் என்றால் சதா தனது ஸ்மிருதியின் ஜோதி மூலம் பிராமண குலத்தின் பெயரை விளங்கச் செய்பவர்கள். அகண்ட ஜோதி, அதாவது சதா ஸ்மிருதி சொரூபம் மற்றும் சமர்த்தி (சக்திசாலி) சொரூபம். நான் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற ஸ்மிருதி இருக்குமானால் சக்திசாலி சொரூபம் தானாகவே இருக்கும். இந்த அகண்ட ஜோதியின் நினைவுச் சின்னமாக உங்கள் ஜடச் சித்திரங்களின் முன்னால் அகண்ட (அணையாத) ஜோதியை ஏற்றி வைக்கின்றனர்.சுலோகன் :

யார் சர்வ ஆத்மாக்களுக்காகவும் சுத்த சங்கல்பம் வைக்கின்றனரோ, அவர்கள் தான் வரதானி மூர்த்தி ஆவார்கள்.***OM SHANTI***

Whatsapp Button works on Mobile Device only