BK Murli 3 November 2016 Tamil

BK Murli 3 November 2016 Tamil

03.11.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் அமைதியில் இருந்து கொண்டே தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் மணி ஓசை முதலானவற்றை எழுப்ப வேண்டிய அவசியமில்லை.

 

கேள்வி:

எந்த விஷயத்தில் தந்தைக்குச் சமமாக ஆனீர்கள் என்றால் அனைத்துக் காரியங்களும் எண்ணியபடி நல்ல விதமாக நடக்கும்?

 

பதில்:

தந்தை அன்புக் கடலாக இருப்பது போல மிக மிக அன்பானவராக ஆகுங்கள். கோபத்தால் காரியம் கெட்டுப் போகிறது, நல்ல விதமாக நடப்பதில்லை, ஆகையால் கண்ணை மிரட்டுவது போல காட்டுவது, உரக்க கத்திப் பேசுவது (சூடாகி) கோபமாகப் பேசுவது இவற்றின் அவசியம் எதுவுமில்லை. அமைதியாய் இருப்பது மிகவும் நல்லது. அன்பால் நிறைய காரியங்கள் நன்றாக நிறைவேறும்.

 

பாடல்:

நீயே என் தாயும் தந்தையும். . .

 

ஓம் சாந்தி.

இந்த மகிமை ஒருவருக்கு உரியது. ஆனால் பக்தி மார்க்கத்தில் ஒருவரின் மகிமையை பாடுவதன் மூலம் பக்தியை காட்டிக் கொள்ள முடிவதில்லை, ஆகையால் பக்தியில் பலரின் மகிமையைப் பாடுகின்றனர். அங்கே சப்தமும் கூட அதிகமாக ஏற்படுகிறது. மணி ஓசை, பாடல்-பஜனைகள், தன்னைத் தானே உருத்திக் கொண்டு அழுது புலம்புவது என எவ்வளவு பக்தி மார்க்கத்தில் நடக்கின்றன. விதவிதமான சப்தங்கள், மந்திர தந்திரங்கள், துதிப்பாடல்கள் முதலானவை இருக்கும் மற்றும் ஞானமார்க்கத்தில் இருப்பது அமைதி ஆகும். சைகை மட்டும் கொடுக்கப் படுகிறது, சப்தம் கொஞ்சமும் கிடையாது. பக்தியில் எவ்வளவு ஆரவாரம் உள்ளது. அனைத்தையும் விட மணி ஓசை சிவனின் கோவில்களில் அதிகமாக ஒலிக்கின்றன, எங்கு பார்த்தாலும் மணியே மணியாகும். யாரையாவது தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக மணியோசை எதுவும் செய்யப்படுவதில்லை. சிவபாபா வந்து மனிதர்களை கும்பகர்ணனின் தூக்கத்திலிருந்து எழுப்பினார், ஆனால் மணியோசை எதுவும் செய்யவில்லை. முற்றிலும் அமைதியாக இரண்டு வார்த்தைகளிலேயே புரிய வைக்கிறார். புத்திசாலிகளாக இருப்பவர்கள் இரண்டு வார்த்தைகளிலேயே புரிந்து கொள்கின்றனர். குழந்தைகளே! என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். ஓ, பதீத பாவனா ! வாருங்கள் என நீங்கள்தான் என்னை அழைத்தீர்கள். இப்போது நான் வந்துள்ளேன், உங்களுக்கு வழி சொல்கிறேன். இன்னும் நீங்கள் தூய்மையற்றவராக இருந்து இந்த உலகிலேயே இருக்க வேண்டுமா? நீங்கள் தூய்மையான உலகில் வாழ விரும்புகிறீர்கள் அல்லவா. சொர்க்கம் தூய்மையான உலகம் எனப்படுகிறது. பதித பாவனர் என்றுதான் சொல்கின்றனர் ஆனால் பதீத பாவனர் வந்து என்ன செய்வார் என புரிந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். புரிந்து கொள்ளாமல் அப்படியே அழைத்தபடி இருக்கின்றனர், கை தட்டி தாளம் போடுகின்றனர். ஆனால் தந்தை வந்தால் வந்து என்ன செய்வார் என தெரியாது. உண்மையில் இது மனிதரிலிருந்து தேவதை ஆக்கக் கூடிய பல்கலைக்கழகமாகும். எனவேதான் மனிதரிலிருந்து தேவதையாக ஆக்கினார். . . என பாடுகின்றனர். இதில் சாஸ்திரம் முதலானவை எதுவும் படிக்க வேண்டியதில்லை. பக்தி மார்க்கத்தில் நிறைய சாஸ்திரங்கள் முதலானவைகளைப் படிக்கின்றனர். நிறைய சொற்பொழிவு முதலானவை நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் மண்டபத்தை ஏற்பாடு செய்து கொண்டு சேர்ந்து சப்தம் செய்கின்றனர். இங்கே எவ்வளவு அமைதியாக தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பாருங்கள், தந்தை வந்து உங்களை தூய்மையாக்கி தூய்மையான உலகின் எஜமானாக ஆக்குகிறார். படிப்பும் கூட எவ்வளவு சகஜமானது. நீங்கள் முதன் முதலில் தூய்மையாய் இருந்தீர்கள், தங்கயுகத்தில் இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து இரும்பு யுகத்தில் தமோபிரதானமாக ஆகி விட்டீர்கள். இப்போது நீங்கள் சதோபிரதானமாக ஆக வேண்டும், ஆகையால் என்னை நினைவு செய்யுங்கள். அதுவும் அமைதியாக. கன்யாவுக்கு திருமணம் நடக்கும்போது ஜபிக்கிறாரா என்ன? நினைவில் இருக்கிறார். நீங்களும் கூட மனைவிமார்களாக இருக்கிறீர்கள், இந்த சிவபாபா பதிகளுக்கெல்லாம் பதியாக இருக்கிறார். உங்களுடைய நிச்சயதார்த்தம் சிவபாபாவுடன் நடந்திருக்கிறது. நிச்சயதார்த்தம் ஆகிவிட்டால் அவ்வளவுதான் புத்தியில் நினைவு பதிந்து விடுகிறது. எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். பிறகு ஒருவர் மற்றவரை நினைத்தபடி இருக்கின்றனர். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் ஒருவருக்கொருவர் சகோதர - சகோதரன் என உங்களுக்கும் நிச்சயபுத்தி ஏற்பட்டுவிட்டது என தந்தை சொல்கிறார். சகோதரர்களுக்கு ஒரு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, ஆகையால் தந்தையைக் கூப்பிடுகின்றனர். மனித உடலில் வந்து சகோதரன் - சகோதரி ஆகின்றனர். ஆனால் ஆத்மா கூப்பிடுகின்றது அல்லவா. ஓ பதீத பாவனா! வாருங்கள் என சகோதர - சகோதரர்கள் கூப்பிடுகின்றனர். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். தூய்மையானவர்கள் சதோபிரதானம் எனவும் தூய்மையற்றவர்கள் தமோபிரதானம் எனவும் சொல்லப்படுகின்றனர் என பாபா சொல்கிறார். இந்த விஷயங்களை பாபா சங்கமயுகத்தில்தான் புரிய வைக்கிறார். இது கீதா பாடசாலை ஆகும். இந்த பாடசாலையில் தந்தை வந்து இராஜயோகம் கற்பிக்கிறார், நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகிறார். அங்கே ஆசிரியர் முன்னால் அமர்ந்து படிப்பிக்கிறார், கண்ணில் தெரிகிறது. இவர் குப்தமானவர். ஆக, இந்த ஆசிரியரைக் கூட புத்தியின் தொடர்பின் மூலம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர் சரீரமற்ற தூய்மை அற்றவர்களை தூய்மைப்படுத்தும் தந்தை ஆவார். கல்பத்திற்கு முன்பும் கூட நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருந்தேன் என அவர்தான் நினைவூட்டுகிறார். அப்போது மன்மனாபவ, தூய்மையடைந்தால் இந்த லட்சுமி நாராயணராக ஆகி விடுவீர்கள் என சொல்லப்படுகிறது. இதில் மணியோசை முதலானவை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தந்தை தாமே வந்து எழுப்புகிறார். மன்மனாபவ என்பதன் அர்த்தமே அமைதி ஆகும். தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்துங்கள். அவ்வளவுதான். இப்போது நாம் நம்முடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். எங்களை துக்கத்திலிருந்து விடுவித்து முக்தியடைந்தவராக ஆக்குங்கள் என தந்தையைத்தான் அழைக்கின்றனர். சன்னியாசிகள் பிரம்மத்தை மட்டும் நினைவு செய்கின்றனர். இப்போது பிரம்ம தத்துவம் என்பது வீடாகும். அவர்கள் வீட்டை நினைவு செய்வார்கள், இங்கே தந்தையை நினைவு செய்ய வேண்டும். வீட்டை மட்டும் நினைவு செய்தால் சன்னியாசி போல ஆகி விடுவீர்கள். அது பகவான் அல்ல.

 

என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நிர்வாண தாமத்திற்குச் சென்று விடுவீர்கள் என தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பிறகு அங்கிருந்து சொர்க்கத்திற்கு வருவீர்கள். இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களை நான் என்னுடன் அழைத்துச் செல்வேன். ஒரு வித பூச்சியினம் (வெட்டுக்கிளி) உள்ளது, அதன் கூட்டம் எவ்வளவு பெரியது என உங்களுக்குத் தெரியும். அனைத்தும் ஒற்றுமையாய் இருக்கும். முதலில் செல்லக் கூடியது உட்கார்ந்து விட்டால் மற்ற அனைத்துமே உட்கார்ந்து விடும். தேனீக்கள் கூட இப்படித்தான். ராணி தேனீ கூட்டை விட்டு வெளியேறினால் அனைத்தும் பின்னால் பறந்து செல்லும். அது அவைகளின் பிரியதர்ஷனைப் போல. அவைகளில் பிரியதர்ஷினியே தன் கூட்டத்தின் மீது இராஜ்யம் செலுத்தும். ஆத்மாக்கள் அனைத்தும் கொசுக்கூட்டம் போல பறக்கும் என சாஸ்திரங்களிலும் உள்ளது. எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளனர். அந்த தேனீக்கள் அனைத்து பருவங்களிலும் (சீஸன்களிலும்) தமது ராணியின் பின்னால் ஓடும். நீங்கள் கூட ஒரு முறை ஓட வேண்டியிருக்கும். இப்போது அனைத்து ஆத்மாக்களும் மூல வதனத்திற்குச் செல்ல வேண்டும். உங்களுடைய சப்தம் கொஞ்சமும் கிடையாது, ஆகையால் பாபா உதாரணத்தைக் காட்டுகிறார். கடுகு போல இருக்கின்றனர். பாபாவும் புள்ளியாக இருக்கிறார், கடுகு போல இருக்கிறார். கசகசாவும் கூட மிகச் சிறிதாக இருக்கும்.. பரமாத்மாவும் புள்ளியாக இருக்கிறார். திவ்ய திருஷ்டி இல்லாமல் அவரைப் பார்க்கவும் முடியாது. முற்றிலும் சிறிய நட்சத்திரம் போல இருக்கிறார். அகண்ட ஜோதியின் காட்சி தெரிந்தது என கீதையில் காட்டுகின்றனர், இங்கும் கூட அகண்ட ஜோதியின் காட்சி தெரிந்தது என்றால் சாட்சாத்காரம் ஆனது என புரிந்து கொள்வார்கள். ஒருவேளை புள்ளியாக காட்சியில் தெரிந்தது என்றால் இவர் பரமாத்மா அல்ல என புரிந்து கொள்வார்கள். கீதையில் எழுதப்பட்டுள்ளது - அர்ஜுனனுக்கு மிகவும் தேஜோமயமான காட்சி தெரிந்தது. பக்தியின் விஷயங்கள் புத்தியில் பதிந்து விட்டுள்ளது. பக்தி மார்க்கத்திற்கும் ஞான மார்க்கத்திற்கும் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. நாம் 63 பிறவிகள் சரீரத்தின் மூலம் எவ்வளவு டான்ஸ் செய்கிறோம் (நடனமாடுகிறோம்) என்பதை நீங்கள் அறிவீர்கள். 63 பிறவிகள் பக்தி மார்க்கத்தின் ஆரவாரங்களை எவ்வளவு பார்க்கிறோம். அதிலும் கூட முதலில் சதோபிரதானமான பக்தி இருந்தபோது ஒரு சிவபாபாவுக்கு பக்தி செய்து கொண்டிருந்தோம். பிறகு இந்த கங்கா ஸ்நானம் முதலானவை பின்னர் தொடங்குகின்றன. முதலில் கலப்படமில்லா பக்தி நடக்கிறது, பிறகு வளர்ச்சி அடைந்து காலப்போக்கில் கலப்படமாகிறது. இங்கேயோ ஒரேயடியாக அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. சோழியை விடவும் கீழான நிலையிலிருந்து நீங்கள் உலகின் எஜமானாக ஆகிறீர்கள். மம்மா கையில் ஒரு சோழி கூட இல்லாமல் வந்தார், உலகின் மகாராணி ஆகி விட்டார். இவர் சாதாரணமாக இருந்தார். முற்றிலும் ஏழை வீட்டைச் சேர்ந்தவர் சோழி அளவு செலவும் இல்லாமல் என்ன ஆகிறார் பாருங்கள். மம்மா பிறகு நிறைய சேவை செய்து கொண்டிருந்தார். மற்றவர்களுக்குச் சென்று புரிய வைத்தார் - என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களின் பாவ கர்மங்கள் அழிந்து போகும், மேலும் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் என்று பாபா சொல்கிறார். இதில் பைசா செலவின் விஷயம் எதுவும் கிடையாது. ஒரு வேளை யாராவது கொஞ்சம் செலவு செய்தாலும் கூட அதுவும் தனக்காகவே ஆகும். விளை நிலத்தில் இரண்டு பிடியளவு நெல்லை விதைத்தாலும் எவ்வளவு கணக்கற்ற நெல்மணிகள் வெளிப்படுகின்றன. விளைச்சல் அதிகரித்து விடுகிறது. இந்த வருமானமும் கூட 21 பிறவிகளுக்கு உங்களுக்கு எவ்வளவு கிடைத்து விடுகிறது. மனிதரிலிருந்து தேவதை ஆவது எவ்வளவு சுலபமானது. ஒரு வினாடியின் விஷயமாகும். எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கிறீர்கள். ஒருவேளை யாருக்காவது உட்கார்ந்திருக்க முடியாவிட்டாலும் படுத்துக் கொண்டேயாவது முரளியை கேளுங்கள். இது தாரணையின் விஷயமாகும். உள்ளுக்குள் பாபா மற்றும் சக்கரத்தை நினைவு செய்து கொண்டே இருங்கள். நினைவு செய்தபடியே சரீரத்தை விட வேண்டும். மற்றபடி வாயில் கங்கா ஜலத்தை ஊற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. இந்த நியமத்தை கடைப்பிடிக்காவிட்டால், பக்தி செய்யாவிட்டால் இப்படி ஆகி விடும் என பயமுறுத்தக் கூடிய குரு, சன்னியாசிகள் நிறைய பேர் உள்ளனர். யாருக்காவது கால் உடைந்து விட்டது அல்லது நஷ்டம் ஏற்பட்டு விட்டது என வைத்துக் கொள்ளுங்கள், அப்போது நீ பக்தியை விட்டு விட்டாய் அதனால் இந்த நிலை ஏற்பட்டது என பயமுறுத்துவார்கள். இங்கே எதுவும் செய்ய வேண்டியதில்லை. பாபாவின் நினைவை கொடுக்க வேண்டும், சக்கரத்தின் ரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். இப்போது கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டியுள்ளது, கண்டிப்பாக வினாசம் ஆக வேண்டியுள்ளது, ஆகையால் இந்த மிகப் பெரிய மகாபாரதச் சண்டை நடக்கவுள்ளது. பகவான் வந்து இராஜயோகம் கற்பித்து நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறார். இது இராஜயோகமாகும். பிரஜாயோகம் அல்ல. சுபமான விசயங்கள் பேச வேண்டும். குழந்தைகள் மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். பாபா இனிமையானவர் அல்லவா. கோபம் முதலான அனைத்தையும் தானமாக எடுத்துக் கொள்கிறார். தந்தை சொல்கிறார் - நான் அன்புக்கடல், நீங்களும் அப்படி ஆகுங்கள். மிகவும் அன்புடன் புரிய வைக்கிறார். இல்லாவிட்டால் குழந்தைகள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள், ஏனெனில் மாயை தலையைக் (புத்தியை) கெடுத்து விடுகிறது. ஆகையால் ஒருபோதும் யாரையும் எதுவும் சொல்லி விடக் கூடாது என சிந்தனை எழுகிறது. கண்ணைக் காட்டி மிரட்டுதல், சூடாகிப் போவது, சப்தமாக பேசுவது போன்ற எதுவும் தேவையில்லை, இதனால் காரியங்கள் கெட்டுத்தான் போகும். அமைதியாக இருப்பது நல்லது. விகாரங்களின் தானத்தைக் கொடுத்து பிறகு திரும்ப எடுத்துக் கொள்வதால் தனது பதவியை இழக்கின்றனர். பாபாவுடையவராக ஆகி விட்டீர்கள் என்றால் 5 விகாரங்களின் தானத்தைக் கொடுத்து விட்டீர்கள். தானம் கொடுத்தால் கிரகணம் விடும் என சொல்கின்றனர். என்றாலும் தந்தை வழிகாட்டியாக இருக்கிறார் அல்லவா. பிராமணர்கள் வழிகாட்டியாக இருக்கின்றனர். சிவபாபாவும் ஆன்மீக வழிகாட்டி ஆவார். நீங்களும் வழிகாட்டிகள். பாபா பிரம்மாவின் உடலில் வருகிறார் எனும்போது இவரும் கூட பிராமணர்தான் ஆவார். பாபா இவருக்குள் அமர்ந்திருக்கிறார், அவர்களின் மகிமையை பாடுகின்றனர் – நீயே தாயும் தந்தையும். . . வேறு யாருக்கும் இந்த மகிமை கிடையாது. அவர்களின் காரியமும் கூட அப்படிப்பட்டதாகும். இது பாடசாலையாகும், தந்தை படிப்பிக்கிறார். இந்த நினைவு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். இலட்சியம் குறிக்கோளே உலகின் இராஜ்யத்தை அடைவதாகும். ஆக, இப்படி கற்றுத்தருபவரை முழுமையாக நினைவு செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் நன்றாக தேர்ச்சி அடைந்தனர் என்றால் ஒவ்வொரு வருடமும் ஆசிரியருக்கு பரிசுகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்த பண்டிகை முதலான அனைத்தும் இந்த சமயத்தினுடையதே ஆகும். ஆனால் இதன் மகத்துவத்தை யாரும் அறிவதில்லை.

 

பாபா ஞானம் நிறைந்தவர் ஆவார். அவர் வருவதே படைப்பின் முதல் இடை கடைசியின் ஞானத்தைக் கொடுப்பதற்காகும். கல்லிலும் முள்ளிலும் எப்படி வருவார்? அனைத்து பொருட்களிலும் ஆத்மா உள்ளது என ஒரு மருத்துவர் சவால் விட்டார். பரமாத்மா இல்லை என்றார். பிறகு எங்கும் நிறைந்தவர் என சொல்லி விடுகின்றனர். அவர்கள் அனைத்திலும் ஆத்மா உள்ளதாக சொல்கின்றனர், சன்னியாசிகள் அனைத்திலும் பரமாத்மா இருக்கிறார் என சொல்கின்றனர். எவ்வளவு இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது! அவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். அவர்தான் அனைத்திலிருந்தும் புத்தியின் தொடர்பை நீக்கி தன் மீது இணைக்கிறார். ஆத்மா கடல் நுரையிலிருந்து வெளிப்பட்டது, கடலில் ஐக்கியமாகி விடும் என அவர்கள் சொல்கின்றனர். சிறிய ஜோதி பெரிய ஜோதியில் ஐக்கியமாகி விடும், பிறகு புதியது உற்பத்தி ஆகும் என பிரம்ம ஞானிகள் புரிந்து கொள்கின்றனர். இந்த பக்தியும் நாடகத்தில் பதிவாகியுள்ளது என பாபா புரிய வைக்கிறார். நானும் கூட நாடகத்தில் பதிவாகியிருப்பதற்கேற்ப குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறேன். 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றுவதும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. என்னென்ன நடக்கின்றதோ அனைத்தும் நாடகத்தின் பதிவுகளாகும். சிலர் புகழவும் செய்கின்றனர், சிலர் தடைகளையும் ஏற்படுத்துகின்றனர்.

 

குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுக்க வேண்டும். தந்தை வருவதே அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வதற்காக. சரீரத்தின் பெயரைக் கூட எடுப்பதில்லை. சரீரத்தோடு சேர்த்து யாரையும் அழைத்துச் செல்ல வரவில்லை. ஓ விடுவிப்பவரே வாருங்கள் என சொல்கின்றனர். எங்களை துக்கத்திலிருந்து விடுவித்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே அமைதி, சுகத்தை அடைய வேண்டும். ஆக அனைவரின் சரீரத்தையும் இங்கேயே விடுபட வைத்து ஆத்மாக்களை அழைத்துச் செல்லப் போகிறேன். ஆக காலனுக்கெல்லாம் காலனாக உள்ளார் அல்லவா. நான் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வேன். எவ்வளவு அதிசயமான விஷயங்களை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். எப்போதாவது எந்த விஷயமாவது புரியவில்லை என்றால் பாபா இன்னும் இதைப் பற்றி புரிய வைக்கவில்லை என சொல்லுங்கள். புரிய வைக்கும்போது உங்களுக்கும் சொல்கிறேன். இப்படியாக தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். பாபா ஞானக்கடல் என குழந்தைகள் புரிந்துள்ளனர். புதிய புதிய விஷயங்களை சொல்லியபடி இருக்கிறார். உலகின் வரலாறு புவியியலை சொல்லக் கூடியவர் படைப்பவரான தந்தை ஆவார். அவர் முதல் இடை கடைசியில் ஞானத்தை சொல்கிறார். நீங்கள் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறீர்கள், சுயதரிசன சக்கரதாரியாகவும் இருக்கிறீர்கள். ஆனால் மாயை மறக்க வைக்கிறது. சோர்ந்து போகின்றனர். ஏதாவது அலட்சியம் ஏற்பட்டு விடுகிறது. கர்மங்களின் கணக்கு வழக்கு உள்ளது அல்லவா. கர்மாதீத (கர்மங்களை வென்ற முழுமை நிலை) அடையும் வரை ஏதாவது ஒன்று நடந்தபடி இருக்கிறது. கணக்கு வழக்கு முடிந்து சரீரத்தை விட்டு விட்டால் சண்டை தொடங்கி விடும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. விகாரங்களை தானம் கொடுத்து விட்டு திரும்பப் பெறக்கூடாது. வாயிலிருந்து சுபமான வார்த்தைகளையே பேச வேண்டும். மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். தந்தைக்குச் சமமாக அன்புக் கடலாக ஆகி இருக்க வேண்டும்.

 

2. அமைதியில் இருந்து சோழி அளவு கூட செலவில்லாமல் உலகின் இராஜ்யத்தை அடைய வேண்டும். தந்தையின் நினைவில் இருந்து கொஞ்சம் செலவு செய்து 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சேமிக்க வேண்டும்.

 

வரதானம் :

இணைந்த சொரூபத்தின் நினைவு மற்றும் உயர்வான நிலையின் (அந்தஸ்து) போதையின் மூலம் கல்ப கல்பத்தின் அதிகாரி ஆகுக.

 

விளக்கம்: நான் மற்றும் பாபா - இந்த நினவில் இணைந்து இருங்கள் மற்றும் ஆத்மாவாகிய நான் இப்போது பிராமணனாக இருக்கிறேன், நாளை தேவதை ஆகப் போகிறேன் என்ற உயர்ந்த நிலை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நானே அது, அதுவே நான் என்ற மந்திரம் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். அப்போது இந்த போதை மற்றும் குஷியில் பழைய உலகம் சகஜமாக மறந்து விடும். நாம்தான் கல்ப கல்பத்தின் அதிகாரி ஆத்மா, நாம்தான் இருந்தோம், நாம்தான் இப்போது இருக்கிறோம் மற்றும் நாம்தான் ஒவ்வொரு கல்பத்திலும் ஆகப் போகிறோம் என்ற போதை எப்போதும் இருக்கும்.

 

சுலோகன் :

தனக்குத் தானே ஆசிரியராக ஆகுங்கள், அப்போது அனைத்து பலவீனங்களும் முடிந்து போய்விடும்.

 

***ஒம்சாந்தி***